Skip to main content

சமச்சீர் கல்வி அல்ல சமச்சீர் பாடதிட்டமே (பாகம் - 2)

சென்ற பதிவின் தொடர்ச்சி
6. வட இந்திய தலித் தலைவர்கள் பலரது பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் தலித் மக்கள் முன்னேற்றத்திற்கு ஹிந்தி வேண்டாம்; ஆங்கிலம் தான் வேண்டும் என் கின்றனர். சமீபகாலமாக பல்வேறு அபத்த தீர்ப்புகளை சொல்லி வரும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கர்னாடக மா நிலத்தில் தாய்மொழி வழி கல்வி அமல்படுத்த முயன்றதை குறை சொல்லியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, வசந்தி தேவி தொடங்கிய கல்வியாளர்களும், ஜன நாயக சக்திகளும் காலம் காலமாக தாய்மொழி வழி கல்விதான் சிறந்தது என்று வாதிட்டு வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சமச்சீர்கல்வி இது குறித்து என்ன சொல்கிறது?



தாய், தவ்தை அல்லது குடும்பத்திலிருந்து குழந்தையின் பிறப்பு முதல் கற்றுக் கொள்ளும் மொழியே தாய் மொழி. இந்தத் தாய் மொழியே சிந்தனை மொழி. இதுவே படைப்பாற்றலுக்கு ஆணிவேர். உயிரைக் கொடுத்து ஆங்கிலம் மட்டும் படிக்க வைத்தால் அவர் நல்ல வேலைக்குக்கூட செல்லலாம். நல்ல வருவாய் ஈட்டலாம். ஆனால் நல்ல மனிதனாக, குடிமகனாக இருக்க முடியாது. நல்ல "ரோபோ"வாக இயங்க முடியும். சாதியத்தால் வதைபட்டு சீரழிந்து போயுள்ள தலித் மக்கள் ரோபோக்களாக மாறினாலும் பரவாயில்லை ஆங்கிலம் கற்று அதன் வழியாகக் கிடைக்கும் மேட்டிமையையும் மேம்பாட்டையும் அடைந்தால் போதும் என்ற விரக்தி மனப்பான்மைக்கு தலித் தலைவர்கள் வந்துவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை.

தாய் மொழி வழிக் கல்விக்கு ஊறு விளைவிப்பதே, அங்கிலம் கற்றால் வேலை வாய்ப்பு அதிகம் என்ற மன-நிலையே. இன்றைக்கு அமைப்பு சார்ந்த, சாராத தொழில்களிலும், நிறுவனங்களிலும் பணி செய்வோர் எத்தனை? இதில் ஆங்கிலத்தால் உயர்ந்த மனிதர்கள் எத்தனை? எங்கு இதற்கு புள்ளி விபரம் உள்ளது. தொழில் சாம்ராஜ்ஜியங்களின் முதலாளிகளுக்கு எத்தனை பேருக்கு அங்கிலம் அத்துபடி? ஆங்கிலமே அவசியம் என்றால் கூட, வேலைக்கு செல்வதற்கு முன்பே அதனை வளர்த்துக் கொண்டவர்கள் எத்தனை பேர்? அத்துறைக்கு கென்ற பின்ன்னர் தங்க்கள் மொழி அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் எத்தனை பேர்? அது போகட்டும் இன்றைய கணிணி வல்லுனர்கள் எத்தனை பேருக்கு அங்கில ஒழுங்காகப் பேச எழுதத் தெரியும்? தான் செய்யும் தொழிலுக்கு ஆங்கிலம் தேவை இருந்தும் அதை வளர்த்துக் கொள்ளாமலே பணி மூப்பு அடைந்தவர்கள் எத்தனை பேர்? நல்ல நுனி நாக்கு ஆங்கிலம் தெரிந்த எத்தனை பேருக்கு ஆங்கிலத் திறனுக்காக வேலை கிடைத்திருக்கிறது? ஆங்கிலத்தில் நல்ல புலமை இருந்தும் வேலையின்றி அலைவோர் இல்லையா? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் கூட நம் ஆங்கில மோகம் குறையப் போவதில்லை.

அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஆங்கிலத்தை மொழிப்பாடமாக கற்று கல்லூரியில் இளங்கலை முதுகலைப் பட்ட வகுப்புகளை ஆங்கிலத்தில் படித்தும் எழுதியும் முதல் வகுப்பில் தேறியவர்களுக்கு கூட பலருக்கு ஆங்கிலம் எழுதப் பேசத் தெரியவில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை ஆங்கில வழியிலேயே படித்திருக்கும் பலருக்கு நல்ல ஆங்கிலம் எழுதப் பேசத் தெரியவில்லை. "நமக்குப் புரிபடாத இந்த ஆங்கிலம், நம்மால் பேச முடியாத இந்த இங்கிலீஷ்" என மற்றவர்களைப் பார்த்து ஏங்கிய நடுத்தர வர்க்கத்தின் ஏக்கப் பெருமூச்சு ஆங்கிலம் எனில் அது மிகையாகாது.

ஆங்கிலம் பேச்சு மொழியாக இல்லாத தேசத்தில், நம்மில் 99 விழுக்காடு மக்களிடம் பறிமாறிக் கொள்ள இயலாத மொழியை, இயல்பாக கற்றுக் கொள்ள முடியாத மொழியை, ஆங்கில இலக்கணத்தை நெஞ்சு, நெஞ்சாகக் குத்தி மனப்பாடம் செய்து, பேசி, எழுதிவிட முயற்சிக்கிறோம். இது நடைமுறை சாத்தியமாகாத போது, அந்த ஏக்கம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. இந்த ஏக்கம் அதிகரிக்க, அதிகரிக்க மெட்ரிக் முதலாளிகளின் கஜானா நிரம்பி வழியத் தொடங்குகிறது.

எனது நெருங்கிய நண்பர், ஆங்கிலப் பேராசிரியர் (உண்மையிலேயே ஆங்கில மொழிப் புலமை மிக்கவர்) ஒருவரிடம் "முதுகலைப் பட்டம் வரை ஆங்கிலத்தில் படித்தும், ஆங்கிலம் பேச முடியவில்லையே ஏன் காரணம் தோழர்? என்று கேட்டேன். அதற்கு அவர் "எட்டாம் வகுப்பு வரை மொழிப்பாடம் ஒழுங்காக கற்றாலே போதும். ஆங்கிலம் பேசவும் எழுதவும் முடியும்" என்றார். "ஆங்கிலப் பாடத்திட்டத்தில் கூட குறையில்லை. போதனை முறைகளும் ஆசிரியர்களும் தக்க விதத்தில் செயல்பட்டால் போதும்" என்றார்.

தமிழ்வழிக் கல்வியில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக எட்டாம் வகுப்பு வரை உரிய முறையில் கற்றாலே ஆங்கிலம் வசப்படும் எனில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் பயிற்றுவிக்க மட்டுமே பல இலட்சம் செலவழித்து ஆங்கில வழியில் படிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன?

நீர் மாசுபாடு கொஞ்சம் ஏற்பட்டுவிட்டதென்றால், அதனை மிகவும் பெரிதுபடுத்தி, தண்ணீர் வியாபாரிகள் நீரைக் காசாக்கி கல்லாவில் குவிப்பார்களாம். அத்தகையதொரு உத்தியைப் பயன்படுத்தி மெட்ரிக் மோகம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்த மோகவலையில் விழுந்த மக்களின் வருவாய் ஒட்ட சுரண்டப்படுகிறது. தற்போதைய சமச்சீர் பாடதிட்டத்திற்கும் தாய்மொழி வழிக் கல்விக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

இலட்சக் கணக்கில் செலவு செய்துதான் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்றுத்தான், ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியும் என்று நம்புபவர்களிடம் தற்போதைய, முந்தைய இடதுசாரிக் கட்சித் தோழர்களை அறிமுகம் செய்ய வேண்டும். முறையான பள்ளிக் கல்வி இல்லாமல் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் கரை கண்ட பி.ஆர். பரமேஸ்வரன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தி சாகாவரம் பெற்ற என். இராமகிருஷ்ணன் போன்றவர்களைப் பற்றி இவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்டு வளர்த்துக் கொண்டார்கள் என்று முணுமுணுத்தால், கஷ்டப்படாமல் ஆங்கிலம் கற்க ஒரே வழி இங்கிலாந்தில் சென்று பிறத்தலே.

7. சமச்சீர்கல்வி என்பது தமிழ் சமூகத்தின் ஏற்றாதாழ்வுகளை களையும்மா? அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களே தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் நிலை மாறுமா?

முதலாளித்துவம் வலுவாகக் கோலோச்சும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுபள்ளி / அருகமைப் பள்ளி என்ற சமச்சீர் கல்வி அமுலாக்கப்படுகிறது. அத்தகையதொரு சமச்சீர்கல்வி அங்கு ஏற்றத் தாழ்வைக் களைய முடியவில்லை. களையவும் முடியாது. காரணம், சமச்சீர் கல்வி மூலம் கிடைக்கப் பெறும் தரம் உயர்ந்த மனித வளத்தை, ஆற்றலை முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவே சமச்சீர் கல்வி தரப்படுகிறது. ஒரு முதலாளித்துவ சமூக கட்டமைப்பு அல்லது வர்க்க சார்புடைய அரசு சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையும் கல்வியை ஒருபோதும் தராது. உதாரணத்திற்கு, தற்போதைய கல்விமுறை. சாதிகள் இல்லை என சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் எத்தனை பேர் இதனை நம்புகின்றனர்? இதுவே முதலாளித்துவ கல்வி முறை. உண்மையான சமச்சீரான கல்வியை உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்று, அதன் வழியாக சமூக ஏற்றத்தாழ்வை போக்கும் நடவடிக்கைக்கு மாற்றிக் கொள்ள வேண்டியது அதன் கடமையும் பொறுப்பும் ஆகும்.

மேலே குறிப்பிட்ட ஆங்கில மோகத்தில் முன்னணியில் நிற்பவர்கல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களே. இவர்களின் இத்தகைய மோகத்தால், 5வது மற்றும் 6வது சம்பளக் கமிஷனின் பெரும்பகுதியை ஆங்கில வழி பள்ளிக்கு செலவழித்துவிட்டு கையறு நிலையில் நிற்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தை சம்பளமாகக் கொடுத்துவிட்டு, அதில் பெரும்பகுதியை ஆங்கில வழி பள்ளிகளுக்கும் சுய நிதிக் கல்லூரிகளுக்கும், (கல்வி முதலாளிகளுக்கு) அவர்களாகவே மனம் உவந்து எடுத்து கொடுத்து வரும் ஒரு மனப்பக்குவ்த்தை ஏற்படுத்தி இத்தகைய வருவாய் சுழற்சியின் மூலம், இவர்களது சம்பளத்தை கபளீகரம் செய்யும்? செய்யும் உத்தியைப் பார்த்தீர்களா? அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட அரசுப் பள்ளிகளை நாடுவதற்கு காரணம் ஓர் வகுப்பு ஓர் ஆசிரியர், ஓராசிரியர் பள்ளி, ஆசிரியர் நியமனற்ற அவலம், பணி மாறுதலில் சென்ற இடத்திற்கு எப்போது ஆசிரியர் வருவோர் என்ற நிச்சயமற்றா தன்மை, நீண்ட விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு பதில் உடனுக்குடன் நியமனம், உரிமையைப் பற்றி பேசும் அதே அளவு கடமைகளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் என்ற நிலையை சக ஆசிரியர்கள் உருவாக்குதல், தமிழில் கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (வேலை கொடுக்கிறார்களோ இல்லையோ சும்மா ஓர் பேச்சுக்கு சொல்லி வைத்தால் போதும்) இருந்தால், மறு நிமிடமே அரசுப் பள்ளிகளை நோக்கி ஓடோடி வருவார்கள். இவ்வளவு குறைபாடுகளை அராசாங்கம் வைத்துள்ளதை புரிந்துகொள்ளாமல் ஆசிரியர்கள் ஓர் அரசுப் பள்ளியில் சேர்க்கவில்லை என்ற கேள்வி அர்த்தமுள்ளதாக மாற்றமடையாது. மேலும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இதரபகுதி மக்களைப் போன்ற பொதுப்புத்தி கொண்டவர்களே. எனவே நிரந்தரத் தீர்வு பொதுப் பள்ளி அருகமை பள்ளியில்தான் பொதிந்து கிடக்கிறது.

8. சமச்சீர்கல்வி கொண்டு வரும் பட்சத்தில் மெட்ரிக் பள்ளிகள் பலதும் மத்திய அரசின் சி.பி.எஸ்.ஸிக்கு மாறிவிடும் நிலை வருமா?

சமச்சீர்கல்வியால் ஆங்கிலம் அடிபடாது. ஆங்கிலத்திற்கு ஆபத்து வராதவரை மெட்ரிக் பள்ளிகளும் அலட்டிக் கொள்ளாது. ஒரு வேளை சமச்சீர் பாடத்திட்டத்தையே மெட்ரிக் பள்ளிகள் தாங்கமுடியாத நிலை (மெட்ரிக் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்குத் திரும்புதல்) ஏற்பட்டால் மத்திய மா-நில அரசுகள் கூட்டாக செயல்பட்டு, கூண்டோடு மெட்ரிக் பள்ளிகளை இரவோடு இரவாக சி.பி.எஸ்.ஸி என உருமாற்றி அறிவிக்கும் சூழல் ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் மெட்ரிக் பள்ளிகளோ, சுய நிதிக் கல்லூரிகளோ இல்லாத அமைச்சர்கள் இல்லை என்ற நிலை தமிழ் நாட்டில் ஏற்பட்டுவிட்டது.

நண்பர்களே, இந்தப் பேட்டியில் எனக்கு சில தெளிவுகள் கிடைத்தது. சமச்சீர்கல்வி குறித்து பெரிதாக மயக்கம் ஏதும் வேண்டாம். அது வந்து இந்த சமூகத்தில் பெரிதான மாற்றத்தை ஏற்படுத்தப் போவ்தில்லை. ஆயினும் இது ஒரு தொடக்கம் என்பதும் தொடர்ந்து இடதுசாரி சக்திகளும், கல்வியாளர்களும் போராடி மேலும் சில மாற்றங்களை கொஞ்சம் கொஞ்சமாவது கொணர முயற்சிக்கலாம். இதையே தாம்ப்ராஸ் போன்ற பிராமண சங்கங்களும் பிற்போக்கு மதவாத சக்திகளும் தாங்க வியலாமல் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கின்றன என்கிற போது "மாற்றுக் கல்வி" நோக்கிய நமது பயணத்தை விரைவு படுத்தவேண்டும்.

எப்போதும் போல பின் குறிப்பு : இது என் முதல் பேட்டி. கேள்விகள் எத்துனை சத்துள்ளதாக இருக்கிறதோ அத்துனை கருத்துள்ளதாகவே பதில்களும் இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.


Comments

Popular posts from this blog

பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி (நாட்டுப்புற சிறுவர் கதைகள்) --நீதிமணி

அப்பா , இன்னைக்கு ஒரு ஊர்லயா அல்லது ஒரு ராஜாவா என்று எப்போதும் கேட்கும் கீர்த்தனா குட்டி முன் இன்று தைரியமாக உட்கார்ந்தேன் . வேற என்ன , நான் கதையோடவும் கையில் இரண்டு இட்லியோடவும் ரெடி அதான் . ஒரு பேனு தலையில மாங்கா கூடை தூக்கி வைச்சுட்டு நடந்துச்சாம் என்றதுதான் பாருங்கள், அப்புறம் அப்பா என்றாள். இதுதான் சிக்னல். ஆரம்பம் மட்டும் அசத்தலாக இருந்துச்சுனா அப்புறம் ப்ராப்ளம் இல்லை. இன்றைய தினம் சுபதினமே. பேன் தூக்கிட்டு போன மாங்காயெல்லாம் ஒரு திருடன் திருட்டிடானாம். ம்… அப்புறம் கீர்த்தனா என அப்படியே டெவல்ப் பண்ணி இட்லி இரண்டு முடிச்சாச்சு. அப்பா ஸ்கூல் போலாம்பா என்றாள். நமக்கும் ஏக குஷி. அப்பா, மதியம் என்ன கதைப்பா என அசராமல் ஒரு ஜான் மனுஷன் ராஜா பொண்ணை கல்யாணம் செய்த கதை என்றேன். ஓகேப்பா என்றாள். மதியம் சாப்பாடும் முடிஞ்சாச்சு. அப்படியே, நரி சண்டை போட்ட்து, கிளி வாழைப்பழம வாங்கியது, பூதம் தங்கச்சியை தூக்கிட்டு போயி பட்ட அவஸ்தைன்னு கதை சொல்லி அசத்தி இரண்டு நாள் ஓட்டியாச்சு. பாரதி புத்தகாலயத்தாருக்கும் நீதிமணி அவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும். ஒரு குழந்தைக...

ஆனை மலை - வாசிப்பு அனுபவம்

அடர் காட்டுக்குள், பழங்குடிகளின் வாழ்வோடு உடன் பயணம் செய்ய வாய்ப்பு கொடுத்த உங்கள் நாவலுக்கு மிக்க நன்றி. எல்லாம் மரமே, பறப்பன எல்லாம் காக்கா, குருவியே என மட்டுமே சுட்டியிருந்த எனக்கு காடு என்பதுள்ளான வாழ்வு ஒன்று உண்டு என்பதை நக்கீரன் காடோடியில் உணர்த்தியிருந்தார். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டியதற்கு உங்களுக்கு பெரு நன்றி தோழர். காடு என்பதற்குள்ளும் ஒரு உலகம் இயங்குகிறது, சென்னையின் நதிக்கரையோரம் வாழ்ந்திடும் குடும்பங்கள் / அவ்வளவாக கவனம் பெறாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள(வைக்கப்பட்டுள்ள) அந்த கீழ்த்தட்டு மக்கள் வாழிடங்கள் மத்தியிலும் ஒரு உலகம் இயங்குகிறது, அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமே அல்ல உயிரினங்களும் முக்கியமே, வேறெங்கும் அவ்வளவாக காணக் கிடைத்திராத மனிதர்கள்-விலங்கினங்கள் இடையேயான பரஸ்பர உறவு, பேச்சுவார்த்தை என்பது இவ்விடங்களில் ஆழமாக, அழகாக இருக்கிறது என சாதாரணர்களுக்கு உரைத்திடவே ஒரு படைப்பு தேவைப்படுகிறது. அவ்வகையில் இப்படைப்பு ‘ஆனைமலை” முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன். இந்நாவலில் கூடுதலாக மனிதர்கள்-விலங்குகள்-மரங்கள்/செடிகள் என முக்கோண ஒரு உறவாடலும், உரையாடலு...

” பாட்டுத்திறத்தாலே “

பாவேந்தர் பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891ல் பிறந்து 21 ஏப்ரல் 1964ல் மறைந்தவர். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையைச் சேர்ந்த அவர் புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாரதிக்கு தன்னை தாசனாக அறிவித்து பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார். அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு உட்பட பல்வேறு நூல்களை எழுதியவர். இவரை புரட்சிக்கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. இவரது மறைவுக்குப்பின் இவருக்கு 1970ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒரு புரட்சிக்கவிக்கு, விசால பார்வையால் விழுங்கு மக்களை என்று மானுடம் மீது தீராக் காதலை கொண்டிருந்தவருக்கு, பல்வேறு பிரிவுகளால், அநீதியாய் பிரிந்து மாறாத ஏற்றத்தாழ்வு கொண்டிருக்கும் இவ்வுலகை தூக்கியெறிந்து “புதியதோர் உலகம் செய்வோம் ” என்று விடுதலை முழக்கமிட்ட அம்மகாகவிக்கு, “அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும் அடுக்கடுக்காய நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொதுநலத்துக்கு என்ன செய்தோம் ” என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை தொட்டு அழுத்திய புரட்சியாளனை, “நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி கோயிலுக்கு உள் செல்க...

பாரதியை பயில்வோம்

                   இன்றோடு 91 வருடங்கள் ஆகின்றன. 39 வயதே ஆகியிருந்தது அப்போது. “காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான்.                  நம் பாரதி, மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?       முதலில், பாரதியை குறிப்பாக அவன் கவிதைகளை பரந்துபட்ட தமிழகத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை தமிழ்திரைப்படங்களையே சாரும். ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களையும் சாரும். தமிழ் திரைப்படங்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவனுடைய புரட்சி பாட்டுக்களை ஒரு குறைந்த சதவீதத்திலாவது சேர்த்தது. தமிழ் கர்நாடக இசை விற்பன்னர்களோ அவனது மாயாலோக பக்தி பாடல்களையும், சிருங்கார ரச ப...

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்

 கொரானா ஊரடங்கு காலத்தில் புத்தகங்கள் வாய்ப்பு கிடைத்தும் பல்வேறு காரணங்களால் புத்தக வாசிப்பு என்பது ஒன்றும் அத்தனை ஜுரூராக நடக்கவில்லை. அவ்வப்போது படிக்க வேண்டும் படித்தே ஆக வேண்டும் என எனக்குத் தோன்றியது என சில மட்டுமே படித்தேன். அப்படி ஜனவரி 2020 புத்தக கண்காட்சியில் வாங்காமல் விட்டுவிட்ட ஒரு புத்தகம் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் அவர்களின் நினைவுகளும் நிகழ்வுகளும் புத்தகம். ரிவோல்ட் வெளியீடு. புலம் டிசைன். வெண்மணி படுகொலை அதையொட்டிய நிகழ்வுகள் என்பதாலே புத்தகம் வெகு விரைவாக தடதடத்து செல்கிறது. தொய்வே இல்லை. ஓரிரவு பொழுதில் படித்து முடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது இப்புத்தக வாசிப்பு. பாரதி புத்தகாலயத்தாரின் வெளீயீட்டில் வந்த வெண்மணி : வாய்மொழி வரலாறு, தென்பரை முதல் வெண்மணி வரை முதலான புத்தகங்களின் வரிசையில் ரிவோல்ட் வெளியீட்டின் இப்புத்தகமும் படிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வெண்மணி படுகொலை வரலாற்று கொடும்நிகழ்வில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் என்பதோடு மற்றொன்று கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆகியோரின் பங்களிப்பும் என மும்முனைகள் இருக்கின்றன. இதில் செங்கொடி இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய இயக்கங...