கொஞ்சம் உங்கள் பழைய நினைவுகளை அசைபோடுங்களேன். அதாவது ஏகதேசம் தொலைக்காட்சி பெட்டிகள் நமது வீட்டின் அந்தஸ்தினை கூட்டிய காலங்கள். வானொலி என்னும் ஊடகம் விவிதபாரதி, ரூபவாஹிணி என்று மாயம் காட்டிய காலங்கள். குடும்பம் குடும்பமாக அதிகாலை வந்தே மாதரம் என்னும் வானொலியில் விழித்த காலங்கள். "பிரேக்கிங் நியூஸ்", பிளாஷ் நியூஸ்" என்று சொல்லி சொல்லியே எந்த செய்தியும் நம்மை சலனப்படுத்தாமல் மனம் மரக்கட்டையாக்கிய அநியாய செய்தி தொலைக்காட்சி சேனல்கள் இல்லாமல், செய்திகள் வாசிப்பது சிவராமன் என்று ஒரு குரல் செய்தியின் தன்மையை நம்மை உணர செய்திட்ட அந்த நல்ல காலம். எல்லா நாட்களிலும், எல்லா வீடுகளிலும் அநேகமாக காலை 7:25 மணிக்கு சமையலறையில் இருக்கும் அம்மாவிற்கும், பத்திரிகையில் முகம் பார்த்திருக்கும் அப்பாவிற்கும், நேற்றைய வீட்டு பாடத்தை அவசர அவசரமாக செய்யும் குழந்தைகளுக்கும், தாத்தா, பாட்டி என அனைவரின் காதுகளையும், சிந்தையையும் ஒருசேர சேர்த்த வானொலியின் "இன்று ஒரு தகவல்" சொன்ன முகம் தெரியாத அந்த குரல் ஒலித்த காலம். அந்தக் குரல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுடையது. "அதாவது",...