"ராஜு, என்னப்பா பார்த்து ரொம்ப நாளாச்சு, எங்கே போனே?" "அது ஒண்ணும் இல்லப்பா, நம்ம ஜேம்ஸ் வாத்தியார் இல்லே, அவருக்கு மேலுக்கு முடியாம இருக்காரா, ஒரு எட்டு பார்த்துட்டு வர்ற ஈரோடு போயிருந்தேன்". "ஏன்ப்பா உனக்கு இந்த வேண்டா த வேலை. அந்தாளு உன்னை எத்தனை தடவை அடிபின்னியிருப்பாரு. அவர் சிரிச்சு ஒரு நாளாவது பார்த்திருப்போமா?" "அது ஒண்ணும் இல்ல சங்கர், அவர் என்னை அடிச்சு துவைச்சது என்னவோ உண்மதான். ஆனா, நான் இப்படி இருக்கேனா அதுக்கு அவரும் ஒரு காரணம் தெரியுமா". ===================================== "மச்சி, உனக்கு விஷயம் தெரியுமா?, நம்ம கணக்கு சுந்தரம் வாத்தியாரை நேத்து எவனோ வண்டியிலே இடிச்சுட்டு போயிட்டானாம், நல்ல அடியாம்" "அட பாவமே" "டேய் என்னடா, பாவமேன்னு சொல்றே. அவரெல்லாம் ஒரு வாத்தியார்ன்னு சொல்றதுக்கே அவமானமாயிருக்கு. ஒரு நாளாச்சும் ஒழுங்கா பாடம் நடத்தியிருக்காரா. எப்பப் பாரு வட்டி, பிஸினஸ்ன்னுட்டு. அவருக்கு நல்லா வேணும்டா" மேற்சொன்ன உரையாடல்களை நம்மில் அநேகரும் பேசியிருக்கக் கூடும். பள்ளி/கல்லூரி முடிந்து ஆண்டுகள் உருண்...